திருச்சி மண்டல ரயில்வே அலுவலகம்… ஹிந்திப் பெயர் நீக்கம் செய்ய முடிவு!
புதியதாக கட்டப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ஹிந்தியில் பெயர் சூட்டப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. “கர்தவ்ய த்வார்” என பதிக்கப்பட்ட பெயருக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பு நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு வலுத்தது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மு.க.ஸ்டாலின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தார். ஹிந்திப் பெயரை பிற மொழிகளிலும் பதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். உடனடியாக உரிய தமிழ்ப் பெயர் இடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லையெனில் மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வெட்டில் இருந்த ஹிந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி மறைக்கப்பட்டன. சர்ச்சை அதிகரித்த நிலையில் ஹிந்திப் பெயரை மாற்ற ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் தமிழ்ப் பெயர் பதியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
