திரிணாமுல் காங்கிரஸ் நிலை குலைந்துள்ளது... அதன் கதை முடிகிறது - பிரதமர் மோடி!
மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு நேற்று (ஏப்ரல் 24) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நாடு கண்டிராத வகையில் பதிவான வாக்கு சதவீதம் மற்றும் மக்களின் ஆதரவு குறித்துப் பிரதமர் மோடி இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 152 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 92.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மேற்குவங்கத் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வாக்கு சதவீதமாகும்.

இன்று இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, "இந்த 92.72% வாக்குப்பதிவு வெறும் எண்கள் அல்ல; இது திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால 'சிண்டிகேட்' ஆட்சி மற்றும் 'மகா ஜங்கிள் ராஜ்' முறைக்கு மக்கள் வைத்த முற்றுப்புள்ளி" எனத் தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது நிலைகுலைந்துள்ளதாகவும், முதற்கட்ட தேர்தலிலேயே பாஜக 110-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் எஞ்சியுள்ள 142 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, ஆர்.ஜி. கர் மருத்துவமனை விவகாரம் மற்றும் சந்தேஷ்காளி போன்ற சம்பவங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதாகப் பிரதமர் மீண்டும் குற்றம் சாட்டினார். வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், "அன்றைய தினம் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் முடிவு தேதியாக இருக்கும்" எனப் பிரதமர் மோடி கூறினார்.

பிரதமரின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, "அதிக வாக்குப்பதிவு என்பது மம்தா பானர்ஜியின் நலத்திட்டங்களுக்கு மக்கள் அளித்த ஆதரவாகும். முதற்கட்டத்திலேயே நாங்கள் 100 இடங்களைக் கடந்துவிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
