வங்கதேச எல்லையில் பிஎஸ்எப் வீரர்கள் மீது தாக்குதல்; துப்பாக்கியைப் பறித்துச் சென்ற கும்பல் – 8 பேர் கைது!
திரிபுரா மாநிலத்தில் வங்கதேச எல்லையையொட்டி கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் மீது கிராம மக்கள் கும்பலாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிபுராவின் செபாஹிஜலா மாவட்டம் பாக்ஸ்நகர் அருகே உள்ள ஆஷாபாரி பகுதியில் சட்டவிரோத கடத்தல் தொடர்பாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பிஎஸ்எப் வீரர்கள் விசாரணைக்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த சிலர் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் உதவி கமாண்டன்ட் நிலை அதிகாரி உள்ளிட்ட 4 வீரர்கள் காயமடைந்தனர். மேலும், வீரர்கள் சென்ற வாகனத்தின் கண்ணாடிகள் மற்றும் முகப்பு விளக்குகள் உடைக்கப்பட்டன. தாக்குதலின்போது வீரர் ஒருவரின் துப்பாக்கியும் பறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த திரிபுரா முதலமைச்சர் மாணிக் சஹா, காவல்துறை தலைமை இயக்குநரிடம் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், 8 பேரைக் கைது செய்தனர். பறிக்கப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
