'இன்று ரிசல்ட் பக்காவா நம்ம பக்கம்தான்'... பிறந்த நாளில் நடிகை த்ரிஷா திருப்பதியில் சாமி தரிசனம்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகை திரிஷா இன்று தனது 42 வது பிறந்தநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை அவர் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் நடைபெற்ற புகழ்பெற்ற சுப்ரபாத சேவையில் கலந்து கொண்ட அவர் ஏழுமலையானை மனமுருகி வேண்டி வழிபாடு நடத்தினார்.
திரிஷாவைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாகப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு ரசிகர் தேர்தல் முடிவுகளைக் குறிப்பிட்டு இன்று ரிசல்ட் பக்காவா நம்ம பக்கம் தான் என்று உரக்கக் கூறினார். இதைக் கேட்ட நடிகை திரிஷா எவ்விதப் பதிலும் கூறாமல் தனது அழகிய சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு அங்கிருந்து அமைதியாக நடந்து சென்றார்.
திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவருக்குத் திரைப்பலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். அவர் தற்போது பல்வேறு முக்கியத் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சூர்யாவுடன் இணைந்து நடித்த கருப்பு திரைப்படம் வரும் மே 14 அன்று திரைக்கு வர உள்ளது. பிறந்தநாளும் புதிய பட வெளியீடும் ஒரே நேரத்தில் வருவதால் திரிஷாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்
