“விஜயின் கடைசி படம் என்பதால் வருத்தம்” - த்ரிஷாவின் தாயார் உருக்கம்!

 
த்ரிஷா உமா கிருஷ்ணன்

தமிழக முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகை த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் இப்படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

'ஜனநாயகன்' திரைப்படத்தைக் கண்டு ரசித்த உணர்வை செய்தியாளர்களிடம் உமா கிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் விவரித்தார். திரையரங்கில் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் குடும்பத்தோடு பார்த்ததாகவும், படம் மிகவும் சிறப்பாக அமைந்து அனைவரையும் கவரும் வகையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகன்

விஜயின் திரையுலகப் பயணத்தில் இந்தத் திரைப்படம் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதால், இது அனைவருக்கும் ஒரு உணர்வுபூர்வமான தருணமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். திரைப்படத் துறையிலிருந்து முழுமையாக விலகி அரசியலில் களமிறங்கியுள்ள விஜயின் முடிவு குறித்துப் பேசிய அவர், "நாங்கள் அனைவரும் 'ஜனநாயகன்' படத்தை மிகவும் ரசித்துத் தான் பார்த்தோம். ஆனால், இதுவே அவருடைய கடைசித் திரைப்படம் என்று நினைக்கும் போது மனதில் பெரும் வருத்தமாக இருக்கிறது. ஒரு நடிகராக இனி அவரைத் திரையில் பார்க்க முடியாது என்பதால், நிச்சயமாக நாங்கள் அவரை மிஸ் செய்யப் போகிறோம்" என்றார்.