“திரிஷா படத்தை வெச்சே ஆகணும்!" - மாமன்றக் கூட்டத்தில் சலசலப்பு!

 
த்ரிஷா காரைக்குடி மாமன்றம்

காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று காரைக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வார்டு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் முன்வைத்த விசித்திரமான கோரிக்கையால் அவையில் பெரும் சலசலப்பும் சிரிப்பலையும் ஏற்பட்டது.

மாமன்றக் கூட்டம் தொடங்கியதும், அரசு அலுவலகங்கள் மற்றும் மாமன்ற வளாகத்தில் 'மறைந்த மற்றும் முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை முறைப்படி வைக்க வேண்டும்' என்று பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வலியுறுத்தினர்.

த்ரிஷாவிஜய் த்ரிஷா

அரசியல் தலைவர்களின் படங்கள் குறித்த விவாதம் அவையில் தீவிரமாக போய்க் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், குறுக்கிட்டுப் பேசிய சுயேச்சை கவுன்சிலர் மெய்யர் என்பவர், ஒட்டுமொத்த அவையையும் அதிர வைக்கும் வகையில் ஒரு வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்தார்.

தலைவர்களின் படங்களோடு சேர்த்து, "நடிகை திரிஷாவின் படத்தையும் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்தே ஆக வேண்டும்" என்று அவர் அடம் பிடித்துள்ளார். கவுன்சிலர் மெய்யரின் இந்த எதிர்பாராத மற்றும் விசித்திரமான கோரிக்கையைக் கேட்டு அவையில் இருந்த மேயர், ஆணையர் மற்றும் சக கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திகைத்துப் பின் பலத்த சிரிப்பொலி எழுப்பினர்.

த்ரிஷா

'அரசு அலுவலகத்தில் நடிகையின் படத்தை வைக்கக் கோருவது என்ன நியாயம்?' என்று சிலர் கிண்டலாகக் கேள்வி எழுப்ப, இந்த விவகாரம் அவையில் சிறிது நேரம் கலகலப்பான விவாதத்தை ஏற்படுத்தியது.