ஹர்முஸ் ஜலசந்தியில் சிக்கல்... பதறும் உலகநாடுகள்... கடலுக்கடியில் புதைத்த கண்ணிவெடிகளின் வழித்தடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் தெஹ்ரான் திணறல்!
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் மிக முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதில் ஈரான் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மோதலின் போது கடற்பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் எங்கே உள்ளன என்பதைக் கண்டறிய முடியாமல் ஈரான் தவித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான சமீபத்திய போரின் போது, ஈரானியப் படைகள் சிறிய படகுகளைப் பயன்படுத்தி ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் நூற்றுக்கணக்கான கடற்படைக் கண்ணிவெடிகளைப் புதைத்தன. இந்த கண்ணிவெடிகள் எங்கு புதைக்கப்பட்டன என்பது குறித்த முறையான ஆவணங்களை ஈரான் பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கடல் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகத்தால் பல கண்ணிவெடிகள் தாமாகவே இடம் பெயர்ந்துள்ளன. இதனால், அவற்றை அமைத்த ஈரானாலேயே தற்போது அவற்றைக் கண்டறிந்து அகற்ற முடியாமல் போனது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் அம்பலமாகியுள்ளது.

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20% பங்கு இந்த ஒரு குறுகிய நீர்வழி வழியாகவே நடைபெறுகிறது. மார்ச் 2ம் தேதியே இந்த வழித்தடத்தை மூடுவதாக அறிவித்த ஈரான், உள்ளே நுழையும் கப்பல்கள் தீக்கிரையாக்கப்படும் என எச்சரித்திருந்தது.
கண்ணிவெடி அச்சுறுத்தல் காரணமாகப் பெரிய எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்களை உருவாக்கியுள்ளது.
ஜலசந்தியைச் சுத்தப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். "தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டு நீர்வழி மீண்டும் திறக்கப்படும்" என அவர் கூறியுள்ளார். ஆனால், நவீன ராணுவங்களே திணறும் இந்தக் கண்ணிவெடி அகற்றும் பணியை மேற்கொள்ள ஈரானிடம் போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "போர் நிறுத்தத்திற்கு ஜலசந்தி உடனடியாகவும் பாதுகாப்பாகவும் திறக்கப்பட வேண்டும்" என நிபந்தனை விதித்துள்ளார். ஈரான் தற்போது சில குறிப்பிட்ட வழித்தடங்களை மட்டும் திறந்து வைத்திருந்தாலும், அவை மிகவும் அபாயகரமானவையாகவே உள்ளன.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையில், இந்தக் கண்ணிவெடிகளை அகற்றுவதே இப்போது மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் பெரிய போர்க்கப்பல்கள் சேதமடைந்திருந்தாலும், கண்ணிவெடிகளைப் பதிக்கப் பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான சிறிய படகுகள் இன்னும் ஈரானிடம் பாதுகாப்பாக உள்ளன. இது ஜலசந்தியை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் அமெரிக்காவுக்கும் சவாலாக உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி எப்போது முழுமையான பாதுகாப்பான வழித்தடமாக மாறும் என்பது இப்போதைக்கு மர்மமாகவே உள்ளது. இதன் விளைவாக உலக நாடுகளின் விநியோகச் சங்கிலி (Supply Chain) பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
