"மன்னார்குடி மின்னும், மின்ன வைப்போம்" - எம்.எல்.ஏ காமராஜின் பேச்சுக்கு டி.ஆர்.பி.ராஜா நெகிழ்ச்சி!

 
காமராஜ்  டி.ஆர்.பி.ராஜா காமராஜ்  டி.ஆர்.பி.ராஜா

அரசியல் களத்தில் மாற்றுக் கட்சியினரை விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில், மன்னார்குடியில் ஒரு ஆக்கப்பூர்வமான அரசியல் நாகரிகம் அரங்கேறியுள்ளது. அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ், முன்னாள் அமைச்சரும் தற்போதைய தவெக முக்கிய நிர்வாகியுமான டி.ஆர்.பி.ராஜாவுக்குச் சூட்டிய புகழாரம் அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ், டி.ஆர்.பி.ராஜாவின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார். "100 ஆண்டு ஆனாலும் நீங்கள் மன்னார்குடிக்காகச் செய்த பணியை வேறு யாராலும் செய்ய முடியாது" என புகழாரம் சூட்டினார். மேலும், கடந்த காலங்களில் டி.ஆர்.பி.ராஜா வருத்தப்பட்டுப் பேசியது தனக்கே சங்கடமாக இருந்ததாகவும், "இப்படி வருத்தப்படுவீர்கள் என தெரிந்திருந்தால் சீட்டே வேண்டாமெனச் சொல்லி இருப்பேன்" என்று அவரிடமே நேரடியாகக் கூறியதாகவும் காமராஜ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

காமராஜ்  டி.ஆர்.பி.ராஜா

இந்த உரையாடல் தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள டி.ஆர்.பி.ராஜா, காமராஜின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். "கட்சிகளால் வேறுபட்டாலும் மன்னார்குடி மீதுள்ள பற்றால் அதன் வளர்ச்சியில் இணைகிறோம். தேர்தலுக்குப் பிறகு அரசியலுக்கு அப்பாற்பட்டு உழைத்தால் தான் அந்தப் பகுதி செழிக்கும் என்பதை நான் எப்போதும் நம்புபவன்" என குறிப்பிட்டுள்ளார்.

"நமது மன்னார்குடியின் வளர்ச்சி தொடர எனது முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும். தொடர்ந்து மன்னார்குடி மின்னும், மின்ன வைப்போம்" எனத் தனது பதிவில் டி.ஆர்.பி.ராஜா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்

தனிப்பட்ட முறையில் நட்பைப் பேணுவதும், தொகுதி வளர்ச்சிக்காகக் கட்சிப் பாகுபாடின்றி கைகோர்ப்பதும் ஆரோக்கியமான அரசியலின் அடையாளம் எனப் பலரும் இந்தப் பதிவைப் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, 'மக்களின் முதல்வர்' விஜய்யின் வழிகாட்டுதலில் தவெக நிர்வாகிகள் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை நோக்கிய அரசியலை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்துப் பகைமையை மறந்து, ஊரின் நலனுக்காக இரு துருவங்களாக இருந்த தலைவர்கள் இணைந்து செயல்படுவது மன்னார்குடி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.