"ஈரான் போரும் எரிபொருள் விலை உயர்வுமே தோல்விக்கு காரணம்” - டிரம்ப் ஒப்புதல்!
அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி சந்தித்த பெரும் பின்னடைவு மற்றும் தோல்விக்கு, ஈரானுக்கு எதிரான போரும் அதன் காரணமாக நாட்டில் உயர்ந்த எரிபொருள் விலையுமே முக்கியக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் பேசுகையில், "நாங்கள் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்குப் பெரும் ஆதரவு கிடைத்தது. இதனால் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என எதிர்பார்த்தேன். இந்த முடிவுகள் சற்று வியப்பளிக்கின்றன. இருப்பினும் இதைக் தனிப்பட்ட முறையில் என் மீதான பின்னடைவாக நான் பார்க்கவில்லை. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் இந்தத் தேர்தலில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்."

"ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்குக் கடுமையான பொதுமக்கள் ஆதரவு இருந்தது உண்மையே. ஆனால், இந்த போரின் காரணமாக அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் பெட்ரோல்/டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. இந்த விலை உயர்வு வாக்காளர்களிடையே பெரும் அதிருப்தியையும் கவலையையும் உருவாக்கியது. அதுவே தேர்தலில் பிரதிபலித்துள்ளது."
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்துப் பேசிய டிரம்ப், "ஈரானுடன் போரில் ஈடுபட வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாங்கள் எடுத்து வரும் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள சூழலில், அடுத்த 2 ஆண்டுகால நிர்வாகம் குறித்து டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், "அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனைத்துச் சட்டங்களுக்கும் எனது சிறப்பு வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் நாட்டின் நலனுக்கு முரணான அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத சட்டங்களை இயற்றினால், எனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றை நிச்சயம் ரத்து செய்வேன்" என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் போர் மற்றும் பணவீக்கம் காரணமாக அமெரிக்கக் காங்கிரஸை ஜனநாயகக் கட்சி மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது, அதிபர் டிரம்பின் எஞ்சிய பதவிக் காலத்தில் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
