வெள்ளை மாளிகையில் முதன்முறை குத்துச்சண்டை போட்டி - ட்ரம்ப் குடும்பத்தினர் வெளியிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயம்!
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வரலாற்றிலேயே முதன்முறையாகத் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை ஒட்டி, டிரம்ப் குடும்பத்தினர் ₹10 லட்சம் மதிப்புள்ள பிரத்யேக தங்க நினைவு நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத நிகழ்வாக, அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் வளாகத்திற்குள் தொழில்முறை விளையாட்டுப் போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது. இந்தத் தனித்துவமான கொண்டாட்டத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்தும் நோக்கில், அதிபர் டொனால்ட் டிரம்ப் குடும்பத்தின் நிறுவனமான 'டிரம்ப் ஆர்கனைசேஷன்' நினைவு நாணயங்களைச் சந்தையில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வரலாற்றுத் தருணம் மற்றும் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 80-வது பிறந்தநாள் ஆகிய இரண்டையும் விமரிசையாகக் கொண்டாடும் வகையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் புகழ்பெற்ற தெற்கு புல்வெளி வளாகத்தில் இந்தத் தொழில்முறை குத்துச்சண்டை போட்டி நடைபெறவுள்ளது. வெள்ளை மாளிகை வரலாற்றில் இப்படியொரு பாக்ஸிங் போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை முன்னிட்டு, அதிபரின் மகன்களான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோரால் வழிநடத்தப்படும் 'டிரம்ப் ஆர்கனைசேஷன்' புதிய அதிகாரப்பூர்வ நினைவு நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேகரிப்பு நாணயங்களின் பிரீமியம் தங்கப் பதிப்பிற்கு அதிகபட்சமாக 11,999 அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.10 லட்சம் ஆகும்.

நேரடி அங்கீகாரம்: இந்த நாணயங்கள் அனைத்தும் பிரத்யேக இணையதளம் மூலம் உலகளாவிய நுகர்வோர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், "அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களால் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டு, தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரே அதிகாரப்பூர்வ நாணயங்கள் இவை மட்டுமே" என்று டிரம்ப் நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகைக்குள் குத்துச்சண்டை போட்டி நடத்தப்படுவது அமெரிக்க அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், டிரம்பின் இந்த வணிக உத்தி சர்வதேச அளவில் நுகர்வோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
