"காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தவறிய கனடா மீது கூடுதல் வரிவிதிப்பு - ட்ரம்ப் மிரட்டல்!

 
ட்ரம்ப்

கனடாவில் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ மற்றும் அதனால் அமெரிக்காவில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா நாட்டிற்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கனடாவின் இந்த மெத்தனப் போக்கால் அமெரிக்க நகரங்களின் காற்றுத் தரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள டிரம்ப், இந்நிலையை மாற்றாவிட்டால் அந்நாட்டின் மீது கடுமையான வர்த்தகத் தடைகள் விதிக்கப்படும் என மிரட்டியுள்ளார்.

கனடா காடுகளில் ஏற்பட்டுள்ள மாபெரும் காட்டுத்தீயின் காரணமாக எழும் அடர்ந்த புகை மூட்டம், எல்லை கடந்து அமெரிக்காவின் பல முக்கியப் பெருநகரங்களுக்குப் பரவி வருகிறது. இதனால் அமெரிக்காவின் பல மாநிலங்களில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவின் காட்டுத்தீயால் அமெரிக்கக் குடிமக்கள் சுவாசிக்கக் தூய்மையான காற்று இல்லாமல் அவதிப்படுவதாகத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

ட்ரம்ப்

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த கனடா அரசு உடனடியாக முறையான மற்றும் போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். தவறும் பட்சத்தில், கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் புதிய கூடுதல் இறக்குமதி வரி (Import Tariff) விதிக்கப்படும் என்று அதிரடியாக எச்சரித்துள்ளார்.

கனடாவிற்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கக்கூடிய இந்த அறிவிப்பு, சர்வதேச வர்த்தக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் டிரம்பின் இந்தத் திடீர் மற்றும் கடுமையான மிரட்டல், இரு அண்டை நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவில் தற்போது புதிய பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே வர்த்தகக் கொள்கைகளில் டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில், தற்பொழுது சுற்றுச்சூழல் விவகாரத்தையும் முன்வைத்து கனடாவை எச்சரித்திருப்பது இரு நாட்டு எல்லையில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு கனடா பிரதமர் தரப்பிலிருந்து என்ன மாதிரியான பதில் வரப்போகிறது என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.