வீட்டோ அதிகாரத்தின் மூலம் எதிர்க்கட்சிகளின் சட்டங்களை ரத்து செய்வேன்... ட்ரம்ப் ஆவேசம்!

 
ட்ரம்ப்

 

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்தால், ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வரும் மசோதாக்களை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்துவேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதை வெளிப்படுத்தின. இதனால் டிரம்ப் நிர்வாகத்தின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தேர்தலுக்கு முன்பாக நியூயார்க் போஸ்ட் ஊடகத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினால், தன்னை 'மிஸ்டர் வீட்டோ' என்று அழைக்க வேண்டிய நிலை வரும் எனக் கூறியிருந்தார்.முதலில் எதிர்க்கட்சியினர் அனுப்பும் மசோதாக்களை நிராகரித்தாலும், பின்னர் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த டிரம்ப், வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியினருக்கு வாழ்த்தும் கூறியுள்ளார். அதேநேரத்தில், நாட்டின் நலனுக்காக இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

US Midterm Elections 2026: Democrats take Senate, Trump faces major setback as Republicans lose key races - The Statesman

ஆனால், ஜனநாயகக் கட்சியினர் ஒத்துழைக்காவிட்டால், அவர்கள் நிறைவேற்றும் மசோதாக்களை வீட்டோ அதிகாரம் மூலம் நிராகரிப்பேன் என எச்சரித்துள்ளார். இதைக் குறிக்கும் வகையில் 'VETO' என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட தொப்பியின் புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பின்படி, அதிபருக்கு மசோதாக்களை நிராகரிக்கும் அதிகாரம் உள்ளது. இருப்பினும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால், அதிபரின் வீட்டோ முடிவை மீறி மசோதாவைச் சட்டமாக்க முடியும்.

இதனால், டிரம்பின் அடுத்த இரண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தில் வெள்ளை மாளிகைக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே அரசியல் மோதல்கள் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது