ராணிப்பேட்டையில் பரபரப்பு: 2 இளைஞர்களைக் கத்தியால் வெட்டிய தவெக நிர்வாகி கைது!

 
தவெக

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களைக் கத்தியால் வெட்டிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நகரப் பொருளாளரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இரு இளைஞர்களுக்கும், தவெக நகரப் பொருளாளராக இருக்கும் கார்த்தி என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த கார்த்தி, விக்னேஷ் மற்றும் சந்தோஷைக் கத்தியால் கொடூரமாக வெட்டியுள்ளார்.

கத்திக்குத்தில் படுகாயமடைந்த விக்னேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தவெக நகரப் பொருளாளர் கார்த்தியைக் கைது செய்தனர். மேலும், இந்த மோதலுக்கான பின்னணி மற்றும் தீவிரக் காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.