டிடிவி தினகரனுக்கு நெருக்கடி... அமமுக-வில் அடுத்த விக்கெட் - தலைமைக் கழகப் பேச்சாளர் அபுதாஹிர் விலகல்!

 
அமமுக அபுதாஹிர் அமமுக அபுதாஹிர்

அமமுக-வின் முக்கிய அடையாளங்களில் ஒருவரான தலைமைக் கழகப் பேச்சாளர் அபுதாஹிர், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிடிவி தினகரனின் சமீபத்திய அதிரடி நடவடிக்கைகளே இந்த விலகலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், அண்மையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரை அக்கட்சியின் அடிப்படைப் பொறுப்பிலிருந்து டிடிவி தினகரன் நீக்கினார். காமராஜின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் அபுதாஹிர், இந்த நீக்க நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது எனக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமமுக

தனது அடுக்குமொழிப் பேச்சால் அமமுக மேடைகளில் கவனம் ஈர்த்த அபுதாஹிர் விலகியது, அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பிரிவுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது அபுதாஹிரும் விலகியிருப்பது அமமுக-வில் நிலவும் குழப்பத்தை உறுதிப்படுத்துகிறது.

விலகிய நிர்வாகிகளில் பெரும்பாலானோர் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக-வில் இணைய ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் ஒரே எம்.எல்.ஏ மற்றும் முக்கியப் பேச்சாளர்கள் விலகி வருவது, டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

டிடிவி தினகரன்

தமிழக அரசியலில் தவெக-வின் எழுச்சி, திராவிடக் கட்சிகள் மட்டுமின்றி அமமுக போன்ற மாற்று அரசியல் பேசும் கட்சிகளிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.