சென்னை மெட்ரோ ரயிலுக்காக பக்கிங்காம் கால்வாய்க்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணிநிறைவு... மூலக்கடையை வந்தடைந்தது 'சேர்வராயன்' எந்திரம்!

 
மெட்ரோ பக்கிங்காம் கால்வாய் சேர்வராயன் எந்திரம் மெட்ரோ பக்கிங்காம் கால்வாய் சேர்வராயன் எந்திரம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் மிக முக்கியமான ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. 3-வது வழித்தடத்தில், பக்கிங்காம் கால்வாய்க்கு அடியில் சுரங்கம் தோண்டும் சவாலான பணியை முடித்து, 'சேர்வராயன்' எந்திரம் மூலக்கடை ரயில் நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 118.9 கிலோமீட்டர் நீளத்திற்கு மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், 'வழித்தடம் 3'-ன் ஒரு பகுதியாக மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கிலோமீட்டர் நிலத்தடி சுரங்கப் பாதை பணிகளை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்காக மொத்தம் 7 சுரங்கத் துளையிடும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட 'சேர்வராயன்' எந்திரம், மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரையிலான கீழ் வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியது.

மொத்தம் 824.6 மீட்டர் நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை பகுதி பல்வேறு சவால்கள் நிறைந்தது. குறிப்பாக, எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு அடியிலும், மிக முக்கியமாக 'பக்கிங்காம் கால்வாய்' பகுதிக்கு அடியிலும் இந்த எந்திரம் நிலத்தடியில் சுரங்கம் அமைத்து பயணித்தது. மேலும், இந்த வழித்தடத்தில் இருந்த 14-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைக் கடந்து இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

சுரங்கம் தோண்டும் பணிகளால் அப்பகுதி பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்போ அல்லது தண்ணீர் தட்டுப்பாடோ ஏற்படாத வண்ணம், அவர்களுக்கு மாற்றுத் தண்ணீர் வசதிகளை மெட்ரோ நிர்வாகம் உடனுக்குடன் செய்து கொடுத்தது. நில அதிர்வுகள் மற்றும் மாற்றங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவிலேயே இருக்கும்படி மிகத் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டு இப்பணி நிர்வகிக்கப்பட்டது.

நேற்று மூலக்கடை மெட்ரோ நிலையத்தின் வடக்கு முனையத்தை இந்த எந்திரம் வந்தடைந்ததை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் டாடா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், பணியாளர்கள் நேரில் பார்வையிட்டுக் கொண்டாடினர்.

டாடா நிறுவனத்தால் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட 9-வது சுரங்கத் துளையிடும் பணி இதுவாகும். இதன் மூலம், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் தங்களது இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளன.