மோடிக்கும், எனக்கும் மனைவி தொல்லைகள் இல்லை... நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கலகலப்பு!
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சபையில் நகைச்சுவையை அள்ளி வீசினார். ஒவ்வொரு ஆணின் வாழ்விலும் தாய், சகோதரி எனப் பெண்களின் தாக்கம் அதிகம் என்று குறிப்பிட்ட அவர், அந்தப் பட்டியலில் 'மனைவி' என்ற வார்த்தையைச் சேர்த்தார். அப்போது ஒரு நக்கலான புன்னகையுடன், தனக்கும் பிரதமர் மோடிக்கும் "மனைவிப் பிரச்சினை இல்லை" என்று அவர் கூறியது மக்களவையில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது.
#WATCH | "Prime Minister and myself don’t have that wife issue...," says LoP, Lok Sabha, Rahul Gandhi on a light-hearted note during the special session of Parliament on women's reservation and delimitation. pic.twitter.com/ZVdPvRalFz
— ANI (@ANI) April 17, 2026
தனது சகோதரி பிரியங்கா காந்தி, கடந்த 20 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் தம்மால் செய்ய முடியாத ஒரு காரியத்தைச் சாதித்துவிட்டதாக ராகுல் பெருமிதத்துடன் கூறினார். "நேற்று எனது சகோதரி பேசிய 5 நிமிடங்களில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சிரிக்க வைத்துவிட்டார்" என்று அவர் குறிப்பிட்டதும் உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் சிரித்தனர். வியாழக்கிழமையன்று பிரியங்கா காந்தி பேசுகையில், பாஜகவின் தந்திரத்தைப் பார்த்தால் சாணக்கியரே அதிர்ச்சியடைவார் என்று குறிப்பிட்டது அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினரை ரசிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
சபையில் சிரிப்பலைகள் ஒருபுறம் இருந்தாலும், மகளிர் இட ஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தேர்தல் களத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற அரசாங்கம் செய்யும் திட்டமிட்ட முயற்சி என்று அவர் குற்றம் சாட்டினார். 2023-இல் நிறைவேற்றப்பட்ட மசோதாவே உண்மையானது என்றும், தற்போதைய திருத்தங்கள் அரசியல் எல்லைகளை மாற்றும் நோக்கம் கொண்டவை என்றும் அவர் வாதிட்டார். 2029-ஆம் ஆண்டு அமலாக்கம் என்ற காலதாமதத்தைத் தவிர்த்து, உடனடியாக இதனைச் செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
