சுடுகாடாக மாறிய சேர்வைக்காரன்பட்டி.. ஒரே கிராமத்தில் 19 பேர் பலி.. உடல்களை வாங்கமறுத்து உறவினர்கள் போராட்டம்!
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ள ஈஸ்வரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து, தற்போது 25 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. இதில் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தது அந்த ஊரையே சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த விபத்தில் 23 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்தவர்களில் பேச்சியம்மாள் (51) மற்றும் பஞ்சவர்ணம் (56) ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இன்னும் 4 சடலங்கள் (3 பெண்கள், 1 ஆண்) அடையாளம் காண முடியாமல் சிதைந்துள்ளதால், டிஎன்ஏ பரிசோதனைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பலியானவர்களில் பாண்டியம்மாள், நாச்சியம்மாள், ஜானகி உள்ளிட்ட 21 பேரின் விபரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்வரி பெயரில் உள்ள இந்த ஆலை, சிவகாசியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கு ₹50 லட்சத்திற்கு விதிமீறிக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. விடுமுறை நாளன்று அதிக லாபத்திற்காக, மருந்து கலக்கும் அறையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சிறுகச் சிறுக எடுத்துச் செல்ல வேண்டிய வெடிமருந்துகளை, மொத்தமாக ஒரே அறைக்குள் குவித்து வைத்ததே இந்த மிகப்பெரிய வெடிப்புக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் ₹5 லட்சம் + ஈமச்சடங்கிற்கு ₹50,000, பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ₹3 லட்சம் என மொத்தமாக ஒரு குடும்பத்திற்கு ₹8.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. கலெக்டர் சுகபுத்ரா இதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
