பாட்டிக்குத் திதி கொடுக்க ஆமை வேட்டை... வினோத நம்பிக்கையால் சிக்கிய 4 வாலிபர்கள்!
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி பகுதியில் உள்ள சோமாவதி ஆற்றங்கரையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெல்தங்கடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டா (42), ராஜேந்திரா (54), விக்னேஷ் (32) மற்றும் பிரசாந்த் (35) ஆகிய 4 இளைஞர்களும் சோமாவதி ஆற்றில் ஆமைகளை வேட்டையாடி, அதன் இறைச்சியைச் சமைப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், ஆற்றங்கரையில் 4 ஆமைகளைக் கொன்று, அவற்றை நெருப்பில் வாட்டிச் சமைத்துக் கொண்டிருந்த இளைஞர்களைக் கச்சிதமாகப் பிடித்தனர்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களின் பாட்டி தேவம்மா என்பவர் சமீபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. பாட்டிக்கு ஆமைக்கறி என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், அவருக்குத் திதி கொடுக்கும்போது ஆமைக்கறியைப் படையலிட்டால் அவரது ஆத்மா சாந்தி அடையும் என அவர்கள் நம்பியுள்ளனர். இந்த வினோத நம்பிக்கையால்தான் ஆமைகளை வேட்டையாடியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆமைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்பதால், பிடிபட்ட 4 இளைஞர்களையும் போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர், நீதிமன்றத்தில் நேராக ஆஜராகுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பாசம் என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக வனவிலங்குகளை வேட்டையாடிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
