நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாடை கட்டிய பொதுமக்கள்!

 
paadai paadai

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்து முறையிட்டு வந்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வந்ததாகக் தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த கோவில்பட்டி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கினைக் கண்டித்து புதிய முறையில் தங்களது எதிர்ப்பைக் காட்ட முடிவு செய்தனர். இதன்படி, நேற்று அவர்கள் கோவில்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை திரண்டு சென்று முற்றுகையிட்டனர்.

அங்கு அலுவலகத்தின் முன்பாக பாடை கட்டி, ஆக்கிரமிப்புகளை அகற்றாத நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்பாராத போராட்டத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.