தூத்துக்குடியில் தவெக அபார வெற்றி... அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 13 பேர் டெபாசிட் இழப்பு!

 
tamilnadu tamilnadu

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் 1,00,536 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்த அவர், இறுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவனை விட 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் 62,805 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியைத் தழுவிய நிலையில், அதிமுக-விற்கு ஒரு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் வெறும் 26,213 வாக்குகளை மட்டுமே பெற்றுத் தனது டெபாசிட் தொகையை இழந்தார். அவரைப் போலவே இத்தொகுதியில் போட்டியிட்ட மற்ற 12 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்திருப்பது, தவெக-வின் மக்கள் செல்வாக்கை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தேர்தல் விதிமுறைப்படி, பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் மட்டுமே வேட்பாளர் தனது டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற முடியும். ஆனால், அதிமுக வேட்பாளர் உட்பட 13 பேர் அந்த அளவை எட்டத் தவறியதால் அவர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். தூத்துக்குடி மண்ணில் ஒரு புதுமுக வேட்பாளராகக் களம் இறங்கி, திராவிடக் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி ஸ்ரீநாத் நிகழ்த்தியுள்ள இந்த வெற்றி, தமிழக அரசியல் மாற்றத்தின் முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.