தூத்துக்குடி பள்ளி மாணவி பாலியல் கொலை வழக்கு... இன்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
தூத்துக்குடி தூத்துக்குடி

தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் கொலை வழக்கில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை அறிவிக்கவுள்ளது. கடந்த மார்ச் 10 ம் தேதி வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும், ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தூத்துக்குடி

இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், தர்ம முனீஸ்வரர் என்ற நபரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த விசாரணைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரர் மீதான அனைத்துக் கட்ட விசாரணைகளும் மற்றும் சாட்சிகளிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணைகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

தூத்துக்குடி

வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி இன்று இந்த வழக்கில் மிக முக்கியமான இறுதித் தீர்ப்பை வழங்கவுள்ளார். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என மாணவியின் குடும்பத்தாரும் பொதுமக்களும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதோடு, இன்று வெளியாகவுள்ள இந்தத் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.