தாய் , சகோதரனால் இளம்பெண் ஆணவப் படுகொலை... கொடூரம்!

 
தூத்துக்குடி தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இளம்பெண் ஒருவர் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதி உடலைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் இந்த அதிரடி விசாரணையில், அது தற்கொலை அல்ல; மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூரமான ஆணவப் படுகொலை என்ற அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட இளம்பெண் அபிசெல்வி என்பது தெரியவந்துள்ளது. அவர் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபரை உருகி உருகிக் காதலித்து வந்துள்ளார். இந்த விபரத்தை அறிந்த அவருடைய குடும்பத்தினர் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். பலமுறை எச்சரித்தும் அபிசெல்வி தனது காதலைக் கைவிட மறுத்ததால், ஆத்திரமடைந்த அவருடைய சொந்த சகோதரர் சிவஞானம், தங்கை அபிசெல்வியை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூரமான ஆணவப் படுகொலைக்கு   பெண்ணின் பெற்ற தாயான எஸ்தர் பாலின் என்பவரும் முழு உடந்தையாக இருந்து, கொலையை மறைக்கத் தற்கொலை நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, பிஞ்சு என்றும் பாராமல் சொந்த மகளையே காவு வாங்கிய பாசமில்லாத தாய் எஸ்தர் பாலின் மற்றும் தங்கை என்றும் பாராமல் கொலை செய்த அண்ணன் சிவஞானம் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த பயங்கர சம்பவம் குறித்துக் கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.