சின்னத்திரையில் குடுமிப்பிடி சண்டை... படப்பிடிப்பு தளத்தில் சீனியர் - ஜூனியர் மோதலால் பரபரப்பு!
சென்னை அடுத்த தண்டலம் தாரப்பாக்கம் நாச்சியார் ஹவுசில் நடைபெற்று வரும் பிரபல சின்னத்திரை சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு தளத்தில், சக நடிகைகளுக்கிடையே ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் மூத்த நடிகை ஆர்த்தி ராம் மற்றும் டிக்டாக் மூலம் பிரபலமான ஜூனியர் நடிகை சசிலயா ஆகிய இருவருக்கும் இடையேதான் இந்தத் திடீர் வன்முறை மோதல் வெடித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து ஓய்வெடுக்கும் இடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்வது தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடே இந்த அடிதடி சண்டைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அடுத்த காட்சியில் நடிப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த நடிகை சசிலயா, சக துணை நடிகைகளுடன் அங்குள்ள சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது தனது காட்சியை முடித்துவிட்டு அசதியுடன் ஓய்வெடுக்க வந்த சீனியர் நடிகை ஆர்த்தி ராமுக்கு, ஜூனியர் நடிகையான சசிலயா வேண்டும் என்றே அமர இடம் கொடுக்காமல் தடுத்து உரசலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி ராம், ஒரு சீனியர் நடிகை நின்று கொண்டிருக்கும் போது ஜூனியர் நடிகை இடம் தராமல் இப்படி செய்யலாமா என்று கேட்டு சசிலயாவைக் கையில் ஓங்கி அடித்துத் தனது கைபேசியிலும் அதனைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார்.
தன்னை அடித்ததால் நிலைகுலைந்த சசிலயா, நீ என்னை அடிக்க எப்படி வரலாம் எனக் கேட்டு ஆர்த்தி ராமுடன் கடுமையான ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து மல்லுக்கட்டத் தொடங்கினார். ஒருகட்டத்தில் இரு நடிகைகளும் ஒருவரை ஒருவர் கைபேசியில் படம் பிடித்தபடி ஆக்ரோஷமாகக் கூச்சலிட்டுத் திட்டியதால் படப்பிடிப்பு தளம் போர்க்களமாக மாறியது. இதுகுறித்து தகவலறிந்த சீரியல் இயக்குநர் உடனடியாக இருவரிடமும் நேரில் சென்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகைகள் அரங்கேற்றிய இந்த மோதல் காட்சியை அங்கிருந்த சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ள சம்பவம் தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
