ஒப்பந்ததாரரிடம் ₹1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி!
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீரா, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ₹1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி மற்றும் கட்டமைப்புப் பணிகளுக்கான தொகையை விடுவிப்பதற்காக, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் வீரா லஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர் ₹1.30 லட்சம் பணத்தை வீராவிடம் நேரில் கொடுக்கும் காட்சிகள் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்பொழுது அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் அரசியல் நகர்வுகள் மற்றும் தவெக ஆட்சியில் லஞ்சம் நிலவுவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் வேளையில், தவெகவின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு நிர்வாகியே லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி இருப்பது தவெக தலைமைக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் லஞ்சப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் வைரலாகும் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்துத் தவெக தரப்பிலிருந்தோ அல்லது மாம்பாக்கம் ஊராட்சி நிர்வாகத் தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
