ஜெயிச்ச கையோடு பனையூர் வாங்க... தவெக தலைவர் விஜய் வேட்பாளர்களுக்கு கட்டளை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந் தேதி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். தேர்தலில் போட்டியிட்ட தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் நேரில் வரவழைத்து தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வாக்கு எண்ணிக்கை குறித்து அவர் விரிவாக விவாதித்தார். தேர்தல் களத்தில் தவெக வேட்பாளர்களின் செயல்பாடு மற்றும் தொகுதிகளில் நிலவும் வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்த அவர், தொண்டர்களின் உழைப்பிற்குப் பாராட்டு தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஜய், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வேட்பாளர்கள் அனைவரும் நேராகச் சென்னை பனையூர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் உங்களுக்காக நான் அங்கேயே காத்திருப்பேன் என்றும் உற்சாகமாகத் தெரிவித்தார். வெற்றி பெற்ற உற்சாகத்தில் வேறு எங்கும் சென்று விடாமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். "நாம் அனைவரும் மக்கள் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவோம் என்கிற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது, எனவே எல்லோரும் நம்பிக்கையுடன் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருங்கள்" என்று அவர் தனது வேட்பாளர்களுக்குத் தைரியம் ஊட்டினார்.

சமூக வலைதளங்களில் தவெக கட்சிக்குச் சாதகமான கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், விஜய்யின் இந்தத் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், முடிவுகள் வெளியான பிறகு அடுத்தகட்டமாகச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கட்சியின் முதல் தேர்தல் களத்திலேயே இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை விஜய் மேற்கொண்டு வருவது மற்ற அரசியல் கட்சியினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
