விசில் அடித்து தவெக தொண்டர்கள் அதிரடி கொண்டாட்டம்!

 
tvk tvk

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் தற்போது 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று முன்னணியில் உள்ளது. இந்தத் தகவல் வெளியான உடனே பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். பலரும் தங்களது கைகளில் வைத்திருந்த விசில்களை ஊதி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் அந்தப் பகுதியே அதிரும் அளவிற்குச் சத்தம் எழுந்தது.

தவெக தலைவர் விஜய் முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்த போதிலும், ஆளுங்கட்சியான திமுகவை விட இருமடங்கு அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பது தொண்டர்களிடையே மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வரும் அவர்கள், விஜய்யின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். விசிலடிச்சான் குஞ்சுகளாக இருந்த ரசிகர்கள் இப்போது அரசியல் தொண்டர்களாக மாறி விசில் சத்தத்தால் வெற்றியைப் பறைசாற்றி வருகின்றனர்.

பனையூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தவெக தொண்டர்கள் வீதிகளில் இறங்கி விசில் ஊதி இந்த முன்னிலை நிலவரத்தைக் கொண்டாடி வருகின்றனர். இன்னும் பல சுற்றுகள் மீதமுள்ள நிலையில், தங்களது கட்சித் தலைவர் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என அவர்கள் உறுதியாகக் கூறி வருகின்றனர். முன்னிலை நிலவரம் தவெக-விற்குத் தொடர்ந்து சாதகமாக வந்து கொண்டிருப்பதால், கொண்டாட்டங்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.