தவெக ஆட்சி அமைக்க ஆதரவு... கை கொடுக்குமா காங்கிரஸ் ?

 
vijay vijay

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெக-விற்கு 10 இடங்கள் குறைவாக உள்ளன. இந்த இக்கட்டான சூழலில், தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு கோரி காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து ஆலோசித்து இறுதி முடிவெடுக்கத் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் ஏற்கனவே தேர்தலுக்கு முன்பே விஜய்யுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டியிருந்தனர். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு ராகுல் காந்தி நேரில் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்திருப்பது இரு கட்சிகளுக்கும் இடையிலான இணக்கத்தை உறுதிப்படுத்துகிறது. டெல்லி மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி, மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், தவெக-வின் பலம் 111-ஆக உயரும். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் சில இடங்கள் தேவைப்படும் என்பதால், மற்ற சிறிய கட்சிகளுடனும் தவெக ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்பியுள்ள நிலையில், காங்கிரஸின் இன்றைய முடிவு தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு கால அரசியலைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.