ஆட்சியைப் பிடிக்க விஜய் அதிரடி தூது... விசிக-வுக்கும் பறந்தது ரகசியக் கடிதம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைப்பதற்கான ஆதரவைத் திரட்டத் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்குத் தவெக தலைவர் விஜய் சார்பில் ஆதரவு கோரி அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், புதுச்சேரியில் இன்று (மே 6) செய்தியாளர்களிடம் பேசியபோது இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைக்க விஜய் விரும்புவதாக ரவிக்குமார் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தவெக-வுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ள நிலையில், விசிக-வின் இந்த நகர்வு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகளும் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. இக்கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைத்தால் விஜய்யின் பலம் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களைத் தாண்டிவிடும் என்பதால் புதிய ஆட்சி உருவாவது உறுதியாகியுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கவுள்ள விஜய், இந்த ஆதரவுக் கடிதங்களுடன் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
