8 மாதக் கர்ப்பிணியாக தவெக வேட்பாளராக மாஸ் காட்டிய பல்லவி... அமைச்சராக வாய்ப்பு!
சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர், 8 மாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு தற்போது அபார வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை பெண் பிரதிநிதித்துவம் 23ஆக அதிகரித்துள்ள சூழலில், இவரின் இந்த வெற்றி ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தனது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று இவர் சேகரித்த வாக்குகள், இன்று இவருக்குப் பெரிய வெற்றியைத் தேடித்தந்துள்ளன.

தேர்தல் களத்தில் ஜாம்பவான்களாகக் கருதப்பட்ட திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி, ஒரு கர்ப்பிணிப் பெண் வெற்றி பெற்றுள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. குறிப்பாகப் பெண் வாக்காளர்களின் பேராதரவு இவருக்குக் கிடைத்ததே இந்த வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பேன் என அவர் தனது வெற்றிக்குப் பிறகு உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழா வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விரைவில் தாயாகப் போகும் இவர் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்க இருப்பது தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை விரும்பிய மக்கள், ஒரு துடிப்பான பெண்ணைத் தங்களது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம் சட்டமன்றத்தில் பெண்களின் குரல் இன்னும் வலுவாக ஒலிக்கும் என்றும், குறிப்பாகத் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்கான திட்டங்கள் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமைச்சரவை லிஸ்ட்டில் பல்லவியின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
