பேரறிஞர் அண்ணா சிலையில் தவெக கொடி... சென்னையில் பெரும் சர்ச்சை!

 
அண்ணா அண்ணா

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கட்டப்பட்டிருந்த சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தவெக தொண்டர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்ணாவின் சிலையில் கட்சிக் கொடியை வைத்தது மற்ற அரசியல் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.

தகவலறிந்த திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அண்ணாவின் சிலையில் கொடியை வைத்தது தேவையற்ற செயல் என்றும், இது பெரியாரிய மற்றும் அண்ணாவிய கொள்கைகளை அவமதிக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அங்குத் திரண்ட காவல்துறையினர், சிலையில் இருந்த தவெக கொடியை முறைப்படி அகற்றினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும், தொண்டர்களிடையே லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டுப் பரபரப்பு நிலவியது.

இந்தச் சர்ச்சைக்குரிய செயல் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைமை இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும், ஆர்வமிகுதியால் சில தொண்டர்கள் செய்த செயலால் கட்சியின் நற்பெயருக்குக் களம் விளைவிக்க வேண்டாம் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.