ஆளுநருக்கு திடீர் நெருக்கடி... விஜய்யை அழைக்கக் கோரி முதியவர் சாலை மறியல்!
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால் ஆளுநர் தரப்பில் இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில், மக்கள் தீர்ப்பை மதித்து விஜய்யை உடனே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தி முதியவர் ஒருவர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கையில் தவெக கொடியுடன் வந்த அந்த முதியவர் நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்றும் அவர் ஆவேசமாக முழக்கமிட்டார். இவரைப் போலவே தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆளுநரின் முடிவுக்கு எதிராகத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரைச் சாலையிலிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகை உரிய முடிவை அறிவிக்கும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் எனத் தவெக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் அரசியல் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.
