தவெக தலைவர் விஜய் நாளை முதலமைச்சராகப் பதவியேற்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெற முடியாமல் இழுபறி நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரிய நிலையில், காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் பங்கு என்ற நிபந்தனையுடன் முதல் கட்சியாக ஆதரவு அளித்தது. இந்த ஆதரவைத் தொடர்ந்து தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்த நிலையில், மீதமுள்ள இடங்களைப் பெற மற்ற கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டு இடதுசாரி கட்சிகளும் தவெக அரசுக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகத் தங்களது அதிகாரப்பூர்வ முடிவை அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, இன்று மாலை நடைபெற்ற அவசரச் செயற்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியும் தவெக-வுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தவெக - 107, காங்கிரஸ் - 5, சிபிஎம் - 2, சிபிஐ - 2, ஐயூஎம்எல் - 2 என மொத்தமாக 118 உறுப்பினர்களின் ஆதரவு விஜய்க்கு கிடைத்துள்ளது.
ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற மேஜிக் எண்ணைத் தவெக எட்டியுள்ளதால், தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் உறுதியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தவெக தலைவர் விஜய் இன்று மூன்றாவது நாளாக ஆளுநரைச் சந்தித்து ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதால், நாளை காலை தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தவெக தலைவர் விஜய் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
