விஜய் முதல்வராக இழுபறி... மனமுடைந்த தவெக நிர்வாகி தீக்குளிப்பு... !
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால், அக்கட்சியின் கிளைக் கழகச் செயலாளர் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அருகேயுள்ள புதுமை கிராமத்தைச் சேர்ந்த 47 வயது இசக்கியப்பன், தனது தலைவருக்கு நேர்ந்துள்ள அரசியல் நெருக்கடியைக் கண்டு மனமுடைந்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே விஜய் முதல்வராக வேண்டி 16 அடி நீள வேலை அலகாகக் குத்திக் கொண்டு இவர் தனது தீவிரப் பற்றை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தவெக-வுக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால் விஜய் முதல்வராக முடியாத சூழல் நிலவி வருவதாகக் கூறி, இசக்கியப்பன் இன்று காலை திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது இசக்கியப்பன் 80 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைவரின் மீதுள்ள பற்றால் ஒரு நிர்வாகி உயிருக்கு அஞ்சும் வகையில் தீக்குளித்த சம்பவம் தவெக தொண்டர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மாற்றங்களுக்காகத் தொண்டர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்க வேண்டாம் எனப் பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
