தவெகவினர் அட்டூழியம்... வாகனங்களுக்கு இடையூறாக பேனர் வைத்ததைத் தட்டிக்கேட்ட காவலர் கை உடைப்பு!

 
தஞ்சாவூர் தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவிற்கு வருகை தரும் தவெக அமைச்சர் வினோத் என்பவரை வரவேற்கும் விதமாக, அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் 4 ரோடு பகுதியில் பெரிய அளவிலான விளம்பரப் பலகைகளை வைத்துள்ளனர். தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை சாலையை இணைக்கும் முக்கியப் பகுதியில், வாகனங்கள் எதுவும் செல்ல முடியாதவாறு இந்த பேனர்கள் குறுக்கே வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தவெக

அந்தச் சமயத்தில் அந்த வழியாக இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர், போக்குவரத்திற்குப் பெருமளவில் இடையூறாக வைக்கப்பட்டிருந்த அந்த விளம்பரப் பலகைகளை அகற்றுமாறு அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் காவலருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகராறு முற்றிய நிலையில், அவர்கள் அங்கிருந்த கட்டைகளைக் கொண்டு காவலரைத் தாக்கியதில் அவரது கை எலும்பு முறிந்தது.

காயமடைந்த காவலர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கும்பகோணம் காவல்துறையினர், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்துத் தாக்கிய குற்றத்திற்காக அந்த அரசியல் கட்சியின் நிர்வாகிகளைக் கைது செய்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிப்பதற்கும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.