ரூ.72 லட்சம் பண மோசடி... த.வெ.க. நிர்வாகி மற்றும் மனைவி மீது வழக்குப்பதிவு!
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பிச்சுவிளையைச் சேர்ந்த கோபி என்ற தனியார் நிறுவன ஊழியர், ஏரல் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்குச் சொந்தமான சொத்தினை ரூ.90 லட்சத்திற்கு விலை பேசியுள்ளார். இதற்காக முதற்கட்ட முன்பணமாக ராஜாவிடம் கோபி ரூ.72 லட்சத்தை வங்கி கணக்கு மூலமாகச் செலுத்தியுள்ளார். மீதித் தொகையான ரூ.18 லட்சத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கி கிரைய ஆவணம் பதிவு செய்துகொள்ள இருதரப்பும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆனால் வங்கி கணக்கில் ரூ.72 லட்சம் பணம் ஏறியவுடன், ராஜாவும் அவரது மனைவி பொன்தெய்வமும் ஒப்பந்தப்படி சொத்தை கிரயம் செய்து தராமல் கோபியுடனான தொடர்பைத் துண்டித்துள்ளனர். மேலும் தங்களது வீட்டைப் பூட்டிவிட்டு ஊரை காலி செய்துவிட்டுத் தலைமறைவாகினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கோபி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதுடன் கோபிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோபி, இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பண மோசடி புகாரில் சிக்கியுள்ள ராஜா தமிழக வெற்றிக் கழகத்தின் நகர செயலாளராகப் பொறுப்பு வகித்து வருவது தெரியவந்துள்ளது.
