தவெக கட்சி அலுவலக திறப்பு விழாவில் பள்ளி சீருடையுடன் மாணவர்கள்... பெரும் பரபரப்பு!

 
tvk tvk

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திப்பம்பட்டி பகுதியில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய கட்சி அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்து வைப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திறப்பு விழா நடைபெறும் இடத்தில் திரண்டிருந்தனர்.

கட்சி அலுவலகத் திறப்பு விழாவிற்கு ஆதரவு திரட்டும் வகையில், குரால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஞாயிறு விடுமுறை நாளான நேற்று பள்ளிச் சீருடையுடன் வரவழைக்கப்பட்டிருந்தனர். மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் எனக் கூறி வரவழைக்கப்பட்ட இந்த சிறு குழந்தைகள் அனைவரும், வெயிலையும் பொருட்படுத்தாமல் விழா மேடைக்கு அருகே நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர்.

விழாவிற்கு வர வேண்டிய சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் திட்டமிட்ட நேரத்திற்கு வராமல், மாலை 4 மணியளவிலேயே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பசியோடும் களைப்போடும் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. விடுமுறை நாளில் அரசியல் கட்சி நிகழ்ச்சிக்கு பள்ளிச் சீருடையுடன் மாணவர்களை அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.