போலியோ முகாமில் ரீல்ஸ் விவகாரம்... தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்!

 
tvk

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் ஒன்றிற்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய ஒன்றிய செயலாளரான முத்துவேல் என்பவர் திடீரென நுழைந்துள்ளார். அங்குப் பணியில் இருந்த அரசு ஊழியர்களிடம் ஏதோ விசாரணை நடத்துவது போலவும், குழந்தைகளுக்குத் தானே முன்வந்து சொட்டு மருந்து கொடுப்பது போலவும் வீடியோ எடுத்து அதனைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பொழுதுபோக்குக் குறுங்காணொளியாக (Reels) அவர் வெளியிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், உரிய அனுமதியின்றி மருத்துவ முகாமிற்குள் அத்துமீறி நுழைந்து குழந்தைக்குச் சொட்டு மருந்து கொடுத்ததாகவும் முத்துவேல் மீது பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான புகார்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கட்சித் தலைமை இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் செயல்பட்ட காரணத்திற்காக முத்துவேல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைப் பொறுப்பு உட்பட   அனைத்துப் பதவிகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக  நீக்கப்படுவதாகக் கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.