கோடை உழவு மானியம் வழங்காத தவெக அரசு - விவசாயிகளுக்கு ஏமாற்றம்!

 
விவசாயி விவசாயம் தரிசு நிலம்

தமிழ்நாட்டில் உள்ள மானாவாரி விவசாய நிலங்களின் மண்வளம் காக்கவும், கோடைக்கால உழவுப் பணிகளை ஊக்குவிக்கவும் முந்தைய அரசுகளால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கோடை உழவு மானியம் தற்போதைய தவெக ஆட்சியில் இன்னும் வழங்கப்படாதது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய ஆட்சிக் காலங்களில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 56.41 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களைப் பயன்பெறும் வகையில் கோடை உழவு மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன்படி, தகுதியான விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 800 முதல் ரூ. 1,250 வரை கோடை உழவுக்கான மானியத் தொகை வழங்கப்படுவது வழக்கம். இந்தத் தொகையானது வழக்கமாக ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலேயே விவசாயிகளின் வங்கிச் கணக்குகளில் நேரடியாக  செலுத்தப்பட்டுவிடும்.

ஆனால், தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று தற்பொழுது ஜூலை மாதம் பாதியை நெருங்கிய நிலையிலும், இந்த ஆண்டுக்கான கோடை உழவு மானியம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தவெக அரசு வெளியிடவில்லை.

வழக்கமாக ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய மானியத் தொகை தற்பொழுது வரை தங்களுக்கு வந்து சேராததால், நடப்புப் பருவத்தில் உழவுப் பணிகளைத் தொடங்கியுள்ள லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் தற்பொழுது மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர். இந்த மானியத்தை அரசு உடனடியாகப் பரிசீலித்து விரைந்து வழங்க வேண்டும் எனப் பல்வேறு விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.