இருமுறை தற்கொலை முயற்சி.. ஜேஜிஎஃப் இசையமைப்பாளர் ஓபன் டாக்!
பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தனது ஆரம்பக்கால வாழ்க்கையில் சந்தித்த துயரமான சம்பவங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ரவி பஸ்ரூர், சமீபத்தில் ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் தனது கடந்த கால வலிகளைப் பகிர்ந்து கொண்டார்.
ரவி பஸ்ரூர் தனது 18 வயதிற்குள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்துள்ளார். வறுமை மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். "வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த தருணத்தில், இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், இரண்டு முறையும் நான் காப்பாற்றப்பட்டேன்" என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அவரது உண்மையான பெயர் 'கிரண்'. அவர் தற்கொலை முயற்சியில் இருந்து இரண்டாவது முறையாகக் காப்பாற்றப்பட்டபோது, அவரை மீட்ட நபர் ரவியின் இசையைத் தற்செயலாகக் கேட்டுள்ளார். அவர் ரவியின் திறமையை நம்பி, அவருக்கு ஒரு கீபோர்டு (Keyboard) வாங்கிக் கொடுத்ததோடு, 35,000 ரூபாய் பணமும் கொடுத்து உதவியுள்ளார். தன்னை மீட்டு, வாழ்க்கையில் ஒரு ஒளியை ஏற்றி வைத்த அந்த நபரின் பெயரான 'ரவி' என்பதையே தனது பெயராக மாற்றிக்கொண்டார். தனது ஊரான 'பஸ்ரூர்' என்பதையும் சேர்த்து 'ரவி பஸ்ரூர்' என்று உலகிற்கு அடையாளப்படுத்திக் கொண்டார்.
இன்று இந்தியத் திரையுலகில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அவர், 25 ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகே இந்த இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்குத் திரைப்படமான 'கல்ட்' (Cult) படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், நடிகர் விஷ்வக் சென் இவருக்கு ஒரு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தைப் பரிசாக வழங்கி கௌரவித்தார். தற்போது யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' (Toxic) படத்திற்கும் இவரே இசையமைத்து வருகிறார். வறுமையிலும் விரக்தியிலும் தற்கொலை வரை சென்ற ஒருவர், இன்று கோடிக்கணக்கான ரசிகர்களைத் தனது இசையால் கட்டிப்போட்டு வருவது பலருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக அமைந்துள்ளது.
