தவெக செயலாளர் மீது கொடூரத் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி!
Sep 27, 2026, 12:42 IST
கும்பகோணத்தில் தவெக மாநகரச் செயலாளர் முருகானந்தம் மீது மர்ம நபர்கள் நடத்திய திடீர் தாக்குதல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக கும்பகோணம் மாநகரச் செயலாளரான முருகானந்தம் காரில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வழியில்காரை மறித்துத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இரும்பு பைப்பைக் கொண்டு காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், முருகானந்தம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடும் பணியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
