விமான நிலையத்தில் தவறுதலாக நடந்த துப்பாக்கிச் சூடு - இரு ஊழியர்கள் காயம்!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததால், அங்கிருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.
வாரணாசி லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி இருந்துள்ளது. பாதுகாப்புப் பரிசோதனை அல்லது கையாளும் போது, அந்தத் துப்பாக்கி எதிர்பாராதவிதமாகத் தவறுதலாக வெடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் திடீர் துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து காயமடைந்தனர்.
காயமடைந்த இரண்டு ஊழியர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைப்புகளும் காவல் துறையினரும் துப்பாக்கியை வைத்திருந்த பயணியைப் பிடித்து, துப்பாக்கி வெடித்ததற்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
