6,277 மீட்டர் உயரத்தில் செஸ்: கின்னஸ் உலக சாதனை படைத்த 2 நண்பர்கள்... வைரல் வீடியோ!
ஈக்வடார் நாட்டின் சிம்போராசோ மலையின் உச்சியில் 6,277 மீட்டர் உயரத்தில் செஸ் விளையாடி, அமெரிக்காவைச் சேர்ந்த 2 நண்பர்கள் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். செஸ் வீரர்களான ஆடம் வினிங்கர் மற்றும் ஜோஷுவா ஹோஸ்ட் ஆகிய இருவரும் சிம்போராசோ தேசியப் பூங்காவின் விம்பர் சிகரத்தில் இந்த ஆட்டத்தை விளையாடியுள்ளனர்.
கடல் மட்டத்திலிருந்து 20,593 அடி உயரத்தில் நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தின் மூலம், நிலத்தில் மிக உயரமான இடத்தில் பலகை விளையாட்டு விளையாடிய பிரிவில் அவர்கள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு நேபாளத்தில் படைக்கப்பட்ட முந்தைய சாதனையை 200 அடி வித்தியாசத்தில் அவர்கள் முறியடித்துள்ளனர்.
கடுங்குளிர் மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் சூழலுக்கு இடையே, மோசமான வானிலையால் தோல்வியடைந்த முதல் முயற்சிக்குப் பிறகு இரண்டாவது முயற்சியில் விடாமுயற்சியுடன் இந்தச் சாதனையை அவர்கள் எட்டியுள்ளனர்.
