பைக் மீது கார் மோதி இரு நண்பர்கள் உயிரிழப்பு... துபாய் வேலைக்குச் செல்ல இருந்த இளைஞர் உயிரிழந்த சோகம்!

 
பைக் விபத்து

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இரு நண்பர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் சில நாட்களில் துபாய் நாட்டிற்கு வேலைக்குச் செல்லவிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை அடுத்த மேலப்பூங்குடியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (26). இவர் விரைவில் துபாய் நாட்டுக்கு வேலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். இவரது நண்பரான ஆதி கார்த்திக் (23) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

நேற்று மாலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் ஒக்கூரிலிருந்து மதகுபட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது பயமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்த இருவரையும் அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஆதிநாராயணன் மற்றும் ஆதி கார்த்திக் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து

தகவலறிந்து வந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்வின் மற்றும் மதகுபட்டி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகாத இரு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.