கிரீஸில் நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேரைத் தேடும் பணிகள் தீவிரம்!
ஐரோப்பிய நாடுகளில் கோடைக்காலக் காட்டுத்தீ தீவிரமடைந்து வரும் நிலையில், கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைப் போலவே கிரீஸ் நாட்டிலும் பல்வேறு வனப்பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. மேற்கு ஏதென்ஸின் 'பசத்' பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்தத் தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் சிறப்பு ஹெலிகாப்டர்கள் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
காட்டுத்தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள், எதிர்பாராத விதமாக நடுவானில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களும் கட்டுப்பாட்டை இழந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கின.
இரு ஹெலிகாப்டர்களிலும் மொத்தம் 4 பேர் பயணித்த நிலையில், அவர்களின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அடர்ந்த வனப்பகுதியில் விபத்து நடந்துள்ளதால், ராணுவத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
