கொண்டைக்கடலையில் பூச்சிமருந்து தெளித்ததில் தூங்கிக் கொண்டிருந்த 2 மகள்கள் பலி!

 
பூச்சி மருந்து

மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் பாலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேஷ் தேபேகர். விவசாயியான இவருக்கு ஆரோகி (வயது 6), ஆராத்யா (வயது 4) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். மல்லேஷ் தனது நிலத்தில் அறுவடை செய்த கொண்டைக்கடலையை வீட்டில் உள்ள ஒரு அறையில் சேமித்து வைத்திருந்தார். அதில் பூச்சிகள் அண்டாமல் இருப்பதற்காகப் பூச்சிக்கொல்லி மருந்தை அவர் அதில் தெளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அறுவடை செய்த கொண்டைக்கடலையில் பூச்சிமருந்து தெளித்த விவசாயி; வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 மகள்கள் உயிரிழப்பு

நேற்று முன்தினம் இரவு மல்லேஷ், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் அதே அறையில்தான் தூங்கினர். தூங்கும்போது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களையும் அவர்கள் மூடி வைத்திருந்ததால், கொண்டைக்கடலையில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு வாயு அறை முழுவதும் பரவியது. நச்சு வாயுவைச் சுவாசித்ததால் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு அசௌகரியம் ஏற்பட்டு அவர்கள் தூக்கத்திலேயே வாந்தி எடுக்கத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகளான ஆரோகி மற்றும் ஆராத்யா ஆகியோர் நிலைகுலைந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் அங்குச் சிறுமிகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கத்தால் குழந்தைகள் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.