உதயநிதிக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலி!

 
பேனர் மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் வாணியன் சத்திரம் பகுதியில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் வாணியன் சத்திரம் பகுதியில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் கட்டும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் வாணியன் சத்திரத்தைச் சேர்ந்த விரேந்தர் மற்றும் காரணி கிராமத்தைச் சேர்ந்த வேலன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த விரேந்தர் மற்றும் வேலன் ஆகிய இருவரும் திமுக ஒன்றியச் செயலாளர் தங்கம் முரளியின் உறவினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உரிய அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதா, பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டனவா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதயநிதி

வாழ்த்து பேனர் கட்டச் சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் வாணியன் சத்திரம் மற்றும் காரணி கிராம மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.