பருவமழை பெய்ய வேண்டி இரண்டு வாலிபர்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க திருமணம்!

 
ஆண்களுக்குத் திருமணம்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தொடங்கிவிட்ட போதிலும், ஒடிசா மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் கவலையடைந்த கிராம மக்கள், மழைக்கடவுளைக் குளிரவைப்பதற்காக இரண்டு ஆண்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ள வினோதச் சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டைய காலத்து வினோத பரிகார நம்பிக்கையின் அடிப்படையில் இந்தத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர்  மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தான் இந்த சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த ஆண்டு அங்குப் பருவமழை பொய்த்ததால், விவசாயப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிராமத்தின் பாரம்பரிய வழக்கப்படி இரண்டு ஆண்களுக்குத் திருமணம் செய்து வைத்தால் உடனடியாக மழை பொழியும் என அங்குள்ள பெரியவர்கள் தெரிவித்துள்ளனர்.

மழை

இதனையடுத்து, அக்கிராமத்தைச் சேர்ந்த ஜதின் கதுவா மற்றும் கலந்தி நாயக் ஆகிய இரண்டு இளைஞர்களைத் தம்பதிகளாக மாற்ற கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் மாலை அங்குள்ள புகழ்பெற்ற சித்தேஸ்வரி கோயிலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சாதாரணத் திருமண விழாவைப் போலவே இந்தத் திருமணத்திலும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பெருமளவில் திரண்டனர். மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் என இரு தரப்பாகப் பிரிந்து, பாரம்பரிய முறைப்படி மேள தாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க இரண்டு இளைஞர்களுக்கும் வேத மந்திரங்கள் ஓதப்பட்டுத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து, திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கிராம மக்கள் சார்பில் தடபுடலாக விருந்தும் வழங்கப்பட்டது. இந்த வினோதப் பரிகாரத் திருமணத்தை முன்னின்று நடத்திய கிராம மக்கள், இதன் மூலம் தங்களது பகுதியில் விரைவில் நல்ல மழை பொழிந்து வறட்சி நீங்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.