திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு - 2 இளைஞர்கள் கைது!
திருவள்ளூர் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த குறளரசன் என்பவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்பியோடினர்.

வீட்டிற்கு வந்து பார்த்த குறளரசன், நகைகள் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகத் திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் போலீசார், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சஞ்சய் மற்றும் ஆகாஷ் ஆகிய இரண்டு இளைஞர்களும் அடையாளம் காணப்பட்டு அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் நகைகளை மீட்கவும், இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
