திண்டுக்கல்லில் டெங்குவுக்கு இரண்டரை வயது சிறுமி பலி; ஆம்புலன்சில் உயிரிழந்த சோகம்!

 
டெங்கு

 

சென்னை, திருப்பூரைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வீலிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சதீஷ் பிரபு – அபிநயா தம்பதியின் இரண்டரை வயது மகள் அக்‌ஷிதா ஸ்ரீ. கடந்த நவம்பர் 5-ம் தேதி அதிகாலையில் சிறுமிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் அவரை வத்தலகுண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்

தொடர்ந்து சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையாததால், நவம்பர் 7-ம் தேதி இரவு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

டெங்கு

சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி மயக்கமடைந்தார். மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.