தைவானைத் தாக்கிய சாம்பி புயல்: ஒருவர் பலி; 527 பேர் காயம்; 259 விமானங்கள் ரத்து
Oct 24, 2026, 19:45 IST
தைவானை ஒட்டிச் சென்ற சாம்பி புயலால் அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புயல் பாதிப்பில் ஒருவர் உயிரிழந்தார்; 527 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலலைகளில் சிக்கி லியூசியூ தீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின்கம்பிகளும் சேதமடைந்தன. 2.88 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், சனிக்கிழமை 259 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தைவானின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக மூடப்பட்டன. தற்போது வலுவிழந்து வரும் புயல், சீனக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து பின்னர் தெற்கு ஜப்பான் பகுதியை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
